Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கோரிக்கை!!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கோரிக்கை!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல், உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் எல் நினோ (El Niño) தாக்கத்தின் விளைவாக இலங்கை தொடர்ந்து பொருளாதார அபாயங்களை எதிர்நோக்கி வருவதால், சீரான பொருளாதாரக் கொள்கைகளைப் பேணுமாறும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவான் பாபஜார்ஜியோ தலைமையிலான IMF குழுவொன்று, 2026 செப்டம்பர் 10 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, சமீபத்திய மேக்ரோ பொருளாதாரம் முன்னேற்றங்கள், நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் (EFF) கீழ் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான கொள்கை முன்னுரிமைகள் குறித்து மதிப்பாய்வு செய்தது.

இந்த விஜயத்தின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்ட பாபஜார்ஜியோ, தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் உறுதியுடன் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.2% வளர்ச்சியடைந்துள்ளதுடன், இது தொடர்ந்து 11 காலாண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட வலுவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் காரணமாக ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 8% ஆக அதிகரித்துள்ளது.

இருந்தபோதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் ஓரளவுக்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையின் வங்கிகள் வலுவான மூலதனத்துடனும் இலாபகரமாகவும் இயங்கி வருவதாகவும், 2026ஆம் ஆண்டின் முதற்பாதியில் நிதிச் செயல்பாடு வலுவாக இருந்ததாகவும், கடன் மறுசீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும் IMF தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter