Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையினால், பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தச் சிக்கல் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி சங்கத்தின் செயற்குழுத் தீர்மானத்திற்கு அமைய நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிர்வாகத்திற்கு வழங்கப்படும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதை முற்றாக இடைநிறுத்துதல்.

அனைத்து வகையான தரவு அமைப்புகளையும் புதுப்பிப்பதை இடைநிறுத்துதல்.

இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.

பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது குறித்து நியாயமான விசாரணையை நடத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவரும் செயலாளரும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter