Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பேருந்துகள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் ஏனைய வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பேருந்துகள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் ஏனைய வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் ஏனைய வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளை வீதியின் நடுவே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையும் உருவாவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார்,

தற்போது மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் பயணம் செய்யக்கூடிய பேருந்து சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து நிறுத்தங்களில் அப்பேருந்துகளை நிறுத்துவதற்கு ஏதுவாக எவ்வித தடைகளும் இன்றி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு ஏனைய வாகனங்களை நிறுத்துவதால், மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி ஏனைய பயணிகளும் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கமைய, இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், பேருந்து நிறுத்தத்தை அணுகுவதற்கு 30 மீற்றருக்குள்ளும் வெளியேறும் திசையில் 15 மீற்றருக்குள்ளும் வாகனங்களை நிறுத்துவது அதன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பேருந்து ஒதுக்கிடங்கள் (Bus Bays) கொண்ட பேருந்து நிறுத்தங்களில் அணுகும் திசையில் 15 மீற்றருக்குள்ளும், வெளியேறும் திசையில் 10 மீற்றருக்குள்ளும் ஏனைய வாகனங்களை நிறுத்துவது அவ்வர்த்தமானி மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்கள் பாதுகாப்பாகப் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு வசதியாக, பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter