சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் ஷீ-ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய அழகுக்கலை நிபுணர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இந்த சிகரெட் தொகுதியை சீனாவிலிருந்து கொள்முதல் செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் MH-179 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைதான பெண்ணிடம் இருந்து 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பல்வேறு வகையான 20,400 சிகரெட்டுகளைக் கொண்ட 102 சிகரெட் பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சீனப் பெண்ணை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.