Thursday, 30 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமும் கொந்தளிப்பான தன்மையும் அதிகரித்துள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த கருத்துத் தெரிவிக்கையில்,

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக, கரையோரப் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் சிறிய ரகப் படகுகள் மற்றும் பாரம்பரியப் படகுகள் மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகின்றது.

ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள படகுகள் இருப்பின், உடனடியாகப் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடற்றொழிலுக்காகப் புறப்பட்டது முதல்,கடலில் தொழிலில் ஈடுபடும் நேரம் மற்றும் மீண்டும் கரை திரும்பும் வரை முழு நேரமும் பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருப்பது கட்டாயமாகும்.

அத்துடன் அண்மைக்காலமாக கடலில் இடம்பெறும் பெரும்பாலான விபத்துகளுக்குப் படகுகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளே காரணமாக அமைந்துள்ளன. எனவே, பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் படகின் எஞ்சின், இயந்திரத் தொகுதிகள் மற்றும் போதுமான எரிபொருள் உள்ளதா என்பதைத் தீர்க்கமாகப் பரிசோதித்து, தொழில்நுட்ப ரீதியாகத் தகுதியுடைய படகுகளை மட்டுமே கடலுக்கு அனுப்புவதை படகுகளின் உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் நிலவும் அலைகளின் தன்மை குறித்து அவதானம் செலுத்தி, பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே தொழிலில் ஈடுபட வேண்டும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினாலும் கடற்றொழில் திணைக்களத்தினாலும் அவ்வப்போது வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் குறித்து தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், ஏதேனும் அவசர நிலைகளின் போது பொறுப்புடன் செயற்படுமாறும் திணைக்களம் அனைத்து மீனவ சமூகத்திடமும் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பகிர்க: Facebook Twitter