மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையொன்றை ஆரம்பிக்க 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.
அவசர வைத்திய சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மிகவும் விரைவாகவும் வினைத்திறனாகவும் சென்றடைவதற்காக இந்தச் சேவையைச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக வாகன நெரிசல் உள்ள நகர்ப்புறங்களிலும் மற்றும் வீதித் தடங்கல்கள் உள்ள பகுதிகளிலும் இந்த மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
அம்புலன்ஸ் வண்டி சென்றடைவதற்கு முன்னர் நோயாளிக்கு விரைவாக முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்குவதே இந்த புதிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சுவசெரிய அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.
இதற்காக விசேட பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தை ஒரு முன்னோடிச் செயற்றிட்டமாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களை இலக்கு வைத்து இந்த வருடம் முடிவடைவதற்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.