Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ விபத்து- பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ விபத்து- பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று அதிகாலை வேளையில் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயற்சித்தனர்.

தொடர்ந்து யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மருந்து களஞ்சியசாலைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய அமிலங்கள் (Acid) மற்றும் மருந்துகள் காணப்பட்டமையால் தீ மிக வேகமாகப் பரவியுள்ளது.

இதன் காரணமாகப் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன் மருந்து களஞ்சியசாலைக் கட்டடமும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

தற்போது தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், களஞ்சியசாலையைச் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த களஞ்சியப் பகுதியில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக அண்மையில் குளிரூட்டப்பட்ட அறை (Cool Room) ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் ஏற்பட்ட மின் கசிவே இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter