டித்வா புயலினால் சேதமடைந்த மன்னார் மற்றும் வடக்கு ரயில் பாதைகளின் திருத்தப்பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், ‘யாழ் தேவி’, ‘உத்தர தேவி’ கடுகதி ரயில் முதலானவை இன்னும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கருத்து தெரிவிக்கையில்,
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மன்னார் மற்றும் வடக்கு ரயில் பாதைகளின் திருத்தப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன.
ஆனால் ரயில்களின் பற்றாக்குறை காரணமாக தலைமன்னார் ரயில் மற்றும் காங்கேசன்துறை வரை பயணிக்கும் பிரதான ரயிலான ‘யாழ் தேவி’ ஆகியவற்றை இன்னும் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
அதேபோல், ‘உத்தர தேவி’ கடுகதி ரயிலையும் இதுவரை சேவையில் ஈடுபடுத்த முடியவில்லை.
ஏனைய பாதைகளிலும் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முறையான நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தங்கள் திணைக்கள மட்டத்தில் இல்லை.
ரயில்வே பொது முகாமையாளர் முயற்சி செய்தாலும், அமைச்சு மட்டத்தில் தேவையான வசதிகள் கிடைப்பதில்லை என்பது தெரிகிறது. இதனால் பயணிகள் நாள்தோறும் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
மேலும், அரச ஊழியர்களின் புதிய மாதத்திற்கான பருவகால பயணச்சீட்டுகள் உரிய முறையில் ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஏனைய பயணிகளுக்கான பயணச்சீட்டுகளும் சரியான நேரத்தில் வழங்கப்படாததால் ரயில் நிலைய அதிபர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பல நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதாகவும், இதனால் ரயில்வே திணைக்களம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி நிலவும் இத்தருணத்தில், ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என முன்மொழிவுகள் வழங்கப்பட்ட போதிலும், போக்குவரத்து அமைச்சர் அது குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல் செயற்படுவது குறித்து அவர் தமது அதிருப்தியை வெளியிட்டார்.
மின்சார ரயில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், தற்போதுள்ள ரயில்களை வழமைக்குக் கொண்டு வந்து, ரயில் பாதைகளை முறையாகப் பராமரியுங்கள்.
கரையோர ரயில் மார்க்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தண்டவாளங்களை மாற்றாமல், வேகக் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதால் எவ்வித பலனும் இல்லை அதனால் பயணிகளுக்கு ஆபத்தே ஏற்படும் என சுமேத சோமரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.