Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை!

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை!

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் சந்தேகநபராக தேஷபந்து தென்னகோனை பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

ஏ.எச்.எம்.டி. நவாஸ், அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், பிரதிவாதியான தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன்போது, மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் நவாஸ், இந்தக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன்போது தேஷபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமாயின், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டது.

பகிர்க: Facebook Twitter