Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!!

ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!!

அரசு பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்காததால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர்கள் சங்கங்கத்தின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் என்ற ரீதியில், அரசு பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் நெருக்கடிகள் குறித்து குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகக் கலந்துரையாடி, அவற்றுக்குத் தீர்வு கிடைக்காத நிலையிலேயே நாங்கள் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டோம்.

தற்போது அரசு பல்கலைக்கழக அமைப்பு தாங்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதை நாம் அறிவோம்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்; புதிய நியமனங்களுக்கு யாரும் முன்வருவதில்லை. உயர்தகுதி வாய்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அரசு கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

அதேபோல் இது தொடர்பாக நாங்கள் அண்மையில் பிரதமரையும் கல்வி அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கோரினோம். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் இது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதிக்கும் பிரதி நிதி அமைச்சருக்கும் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்பினோம். ஏனெனில் பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கும் மானியங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அமைப்பில் பெரும் நெருக்கடிகள் காணப்படுகின்றன. இருப்பினும் அந்தக் கடிதங்களை அனுப்பி இப்போது இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை அதற்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கவில்லை- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter