வடக்கு ரயில் பாதையில் தினசரி இயக்கப்பட்டு வந்த 18 ரயில் சேவைகளின் எண்ணிக்கை தற்போது 8 ஆகக் குறைந்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
டித்வா சூறாவளி வருவதற்கு முன்னர் வடக்கு ரயில் பாதையில் நாளொன்றுக்கு 18 ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது 8 ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
குறிப்பாக புதன்கிழமைகளில், வடக்கு ரயில் பாதையில் நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் மற்றும் இரவு அஞ்சல் ரயிலைத் தவிர சாதாரண பயணிகள் பயணிப்பதற்கு வேறு ரயில்கள் இல்லை.
அதேபோல் இன்னும் ‘யாழ் தேவி’ கடுகதி ரயில் ஒரு நாள் விட்டு ஒரு நாளே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, மலையக ரயில் பாதையில் தினசரி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹட்டன் வரை 42 சரக்கு மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் இயங்கின. கடந்த மாதத்தில் இந்தப் பாதையில் கம்பளை வரையிலான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போக்குவரத்து தொடங்கப்பட்ட கையோடு ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டு வருமாறு நாங்கள் சங்கமாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் தற்போது அந்த 42 சேவைகளில் தினசரி 8 சேவைகள் மட்டுமே இயங்குகின்றன. எஞ்சிய 34 ரயில் சேவைகளும் இயக்கப்படவில்லை- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.