Tuesday, 8 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வடமாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை 31 சதவீதமாக உள்ளது- எம்.பி ரவிகரன் வெளிப்படுத்திய தகவல்!!

வடமாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை 31 சதவீதமாக உள்ளது- எம்.பி ரவிகரன் வெளிப்படுத்திய தகவல்!!

வடமாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை 31 சதவீதமாக காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை 31 சதவீதமாக காணப்படுவதாகத் தெரிவித்தார். ஆசிரியர் வளப் பரம்பல் சீரற்ற நிலையில் காணப்படுவதால் தீவகம், தென்மராட்சி, மடு உள்ளிட்ட கல்வி வலயங்களில் இந்தப் பற்றாக்குறை மேலும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வலய மட்டத்தில் இயங்கும் வன்பொருள் அணிகள், பாடசாலைகளில் உள்ள கணினிகளைத் திருத்துவதுடன், இலத்திரனியல் சாதனங்களுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளையும் தயாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எனினும் இந்த வன்பொருள் அணிகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்டே இயங்குவதால், ஆசிரியர் பற்றாக்குறைக்கு மத்தியில் ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று கணினிகளைப் பராமரிப்பதும் தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதும் சிரமமாக உள்ளதாக ரவிகரன் தெரிவித்தார்.

அத்துடன் மேசைக் கணினிகளைப் பழுதுபார்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள், வரைபட்டிகைகள், பல்லூடக எறிவைகள் மற்றும் ஸ்மார்ட் பலகைகள் உள்ளிட்ட சாதனங்களின் வன்பொருள் கோளாறுகளைச் சரிசெய்வதற்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக பாடசாலைகளில் பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களை உரிய காலத்துக்குள் திருத்துவதிலும், தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாகவும், இது இலத்திரனியல் கழிவுகளின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதுடன், அவர்களுக்கு தேவையான முழுமையான பயிற்சிகளை வழங்கி, இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை முன்வைக்குமாறு பிரதமரிடம் ரவிகரன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பரீட்சைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்குள் தற்போதுள்ள ஆசிரியர் ஆளணிப் பற்றாக்குறையில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆளணி சேர்ப்புத் திட்டத்தின் ஊடாக எஞ்சியுள்ள பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான தேவையான பயிற்சிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்ப்பதற்கான நிதி மாகாண சபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைகள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் மேலதிக நிதியையும் ஒதுக்க முடியும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பகிர்க: Facebook Twitter