Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

உரிய ஆவணங்கள் இருந்தால், உங்கள் மண் நிச்சயம் உங்களுக்கே- இளங்குமரன் எம்.பி உறுதி!

உரிய ஆவணங்கள் இருந்தால், உங்கள் மண் நிச்சயம் உங்களுக்கே சொந்தமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் நேற்று (24) மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயப் பாதைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், அவர்களின் பிரதிநிதிகள் சிலரை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சக நாடாளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீ பவானந்தராஜாவுடன் இணைந்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்:

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் நாம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகின்றோம். மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகள் முறையான ஆவணங்களுடன் கையளிக்கப்பட வேண்டும், அப்போதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். உங்களிடம் ஆவணங்கள் இருந்தால், உங்கள் மண் நிச்சயம் உங்களுக்கே சொந்தமாகும்.

தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்திருந்தார்.

இதனால் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும், இதுவரை விடுவிப்பு இடம்பெறவில்லை.

இதேவேளை, பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், ஆலயத்திற்கான பிரதான பாதை இன்னும் விடுவிக்கப்படவில்லை. அப்பாதையில் இராணுவத்தினரின் வாகனத் திருத்தக மையம் அமைந்துள்ளதால், மக்கள் தனியார் காணிகளின் ஊடாக தற்காலிகப் பாதையைப் பயன்படுத்தியே ஆலயத்திற்குச் செல்கின்றனர்.

இந்த வாகனத் திருத்தகத்தை அகற்றி பாதையை விடுவிக்குமாறு கடந்த ஒரு வருடமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுப்பதென வலி. வடக்கு பிரதேச சபையின் கடந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter