வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவர் 54 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியன பகுதியில், கெஹெல்பத்தர விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதான நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 54 தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவை வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒரு குற்றவாளிக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.