Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வல்வெட்டித்துறை பகுதியில் ஒரு கோடி ரூபா திருட்டு- பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது!

வல்வெட்டித்துறை பகுதியில் ஒரு கோடி ரூபா திருட்டு- பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது!

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் கடந்த 27ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்து குறித்த நபர்கள் இருவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தி சி.சி.ரி.வி (CCTV) கெமராக்களை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேகநபர்களைக் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும், மற்றையவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது இவர்கள் வீட்டிற்குள் நுழைந்து பணத்தைப் பார்த்ததும், நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கு ‘வீடியோ கோல்’ (Video call) மூலம் தகவல் தெரிவித்துள்ளமையும், அவர் அனைத்துப் பணத்தையும் எடுத்து வருமாறு பணித்தமையால் அதனை நெடுங்கேணிக்குக் கொண்டு சென்று காணி ஒன்றில் புதைத்து வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 74 லட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நீதிமன்ற அனுமதி பெற்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter