Saturday, 25 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய குற்றப் பின்னணி கொண்ட இலங்கையர்கள் இருவர் கைது!

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய குற்றப் பின்னணி கொண்ட இலங்கையர்கள் இருவர் கைது!

குற்றப் பின்னணி கொண்ட இலங்கையர்கள் இருவர் தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய சம்பவம் தொடர்பில் இராமேஸ்வரம் கடலோரக் காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று (24) அதிகாலை இலங்கையிலிருந்து, இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு சட்டவிரோதமாகப் படகு ஒன்றில் இருவர் வந்து இறங்கியதாக ராமேஸ்வரம் மரைன் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், மரைன் உதவி ஆய்வாளர் காளிதாஸ் தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலிஸார், இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்த லூஸிநந்த் (30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (31) என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து ரூ.3 லட்சம் பணம் கொடுத்துப் படகில் புறப்பட்டு, நேற்று (24) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர் குறித்தும் இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தனர். அதில் இவர்கள் இருவர் மீதும் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine), ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இலங்கையிலிருந்து கடல் வழியாகத் தமிழகத்திற்குள் ஊடுருவிய இவர்கள், தமிழகம் அல்லது கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருக்கும் நோக்கில் வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் மத்திய, மாநில உளவுத்துறையினரும் போலிஸாரும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடவுச்சீட்டு இன்றிச் சட்டவிரோதமாக ஊடுருவியதற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைக்க மரைன் போலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் இவர்கள் மீது இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு தீவிர வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இருவரையும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என ‘கியூ’ பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, இருவரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை அண்மையில் வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பகிர்க: Facebook Twitter