நாட்டுக்குள் சட்டவிரோதமாக குஷ்’ போதைப்பொருளை கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (09) காலை கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதி என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.