Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பிடியாணை உத்தரவு விவகாரம்- நாடாளுமன்றில் கொதித்த அர்ச்சுனா எம்.பி!!

பிடியாணை உத்தரவு விவகாரம்- நாடாளுமன்றில் கொதித்த அர்ச்சுனா எம்.பி!!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

இன்று பாராளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சபையில் குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி, இதனால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் விவாதமொன்றில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.

இதன்போது பிரதியமைச்சர் சுனில் வட்டகல குறுக்கிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் தவிர அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி எம்.பி சுஜீவ சேனசிங்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுவான பிரச்சினையென்றும் இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை பாராளுமன்றம் எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இதன்போது பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றம் உரிய கவனத்தை செலுத்துமென உறுதி வழங்கினார்.

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அர்ச்சுனா எம்.பி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter