பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, monwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதன் மூலம், பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை உமா குமரன் படைத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், “எனது பெற்றோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த பிரித்தானியா, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை வழங்கியது. இன்று அந்த நாட்டிற்கு அமைச்சராக சேவையாற்றுவது பெருமைக்குரியது” என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுவதுடன், அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இதற்கு முன்னர், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன, லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.
உமா குமரனின் நியமனம், பிரித்தானிய அரசியலில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகவும், அந்நாட்டின் பல்வகைமை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவும் அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.