இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 35,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30% முதல் 40% வரையான அதிகரிப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோயாளர்களில் சுமார் 80 சதவீதமானோர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளனர்.
‘டித்வா’ புயல் நிலைமையுடன் நாட்டில் ஏற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி மற்றும் அதன் பின்னர் அவ்வப்போது பெய்த மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில்(05) மற்றுமொரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனுடன் இந்த வருடத்தின் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 5 ஆண்கள் அடங்குவதுடன், ஏனையோர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் 29 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்திருந்தனர் என்றும் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.