எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாய்க்காவது அதிகரிக்கப்பட வேண்டும். மே 6ஆம் திகதி தரவுகளின்படி, பெட்ரோல் விலையும் குறைந்தது 20 அல்லது 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அதனை மானியம் வழங்கி ஓரளவுக்கு சமநிலைப்படுத்த முடியும்.
எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருந்தால் என்ன நடக்குமோ, அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும். இந்த சுழற்சிதான் கடந்த காலங்களிலும் நடந்தது. அதுதான் பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் வழியாகும். இது பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் எரிபொருள் விலையை உயர்த்தாமல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், அது பணவீக்கத்தில் இன்னும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு எரிபொருள் மானியத்தை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானது என்றும் தனநாத் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை எப்போதும் சமூக மானியத்துடனேயே அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறேன். தற்போது அரசாங்கம் கூறும் வகையில் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 100 ரூபாய் வழங்கப்படுகிறது. பொதுவாக எரிபொருளுக்கு மானியம் வழங்கினால், அந்த மானியம் பெரும்பாலும் மானியம் தேவைப்படாதவர்களுக்கே சென்றடையும். மானியம் வழங்குவதற்கு ஏழ்மையான மக்களைத் தேர்ந்தெடுத்தால், மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறையும். பொதுப் போக்குவரத்துக்கு, அவர்கள் பயணிக்கும் கிலோமீட்டர் தூரத்தின் அடிப்படையில் டீசல் மானியத்தை எம்மால் மிக எளிதாக வழங்க முடியும். இலங்கையிலுள்ள பணக்காரர்களுக்கு இதனை வழங்குவதை விட, பேருந்தில் பயணிக்கும் சாதாரண மனிதனுக்கு இதனை வழங்குவது சிறந்தது- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.