வெனிசுலாவை அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” அமெரிக்கக் கொடியுடன் சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தனது நாடு அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறுவது குறித்து “எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரிசீலிக்கவில்லை” என்று கூறி ஒரு நாளுக்குப் பிறகு ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை Fox News ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்திருந்த ட்ரம்ப், எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவை அமெரிக்காவின் புதிய மாநிலமாக மாற்றுவது குறித்து “பரிசீலித்து வருவதாக” கூறியிருந்தார்.
எனினும் இந்த யோசனையை நிராகரித்த டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலா மக்களின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.