கடந்த 24ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை புகையிரத நிலையத்தில் தடம் புரண்டிருந்த நிலையில், இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தடம் புரண்ட சாகரிக்கா ரயிலில் கடமையாற்றிய ரயிலின் சாரதி, காப்பாளர் , உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகிய நான்கு ஊழியர்கள் ரயில் சேவைக் கடமைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புகையிரத நிர்வாகத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காகவே விபத்துக்குள்ளான ‘சாகரிக்கா’ ரயிலின் சாரதி, காப்பாளர், உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ள ரயில்களை இயக்குவதிலிருந்து விலகவும், வேகக் கட்டுப்பாடுகளுக்கு அமைய ரயில்களை இயக்கவும் ரயில் சாரதிகள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் இந்திக தொடம்கொட சுட்டிக்காட்டுகின்றார்.