Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பொலிஸாரின் கவன குறைவால் யாழ் இளைஞன் கனடாவில் உயிரிழப்பு!

கனடாவின் பிரம்டன் நகரில் திடீர் உடல்நலக்குறைவால் வீதியில் மயங்கி விழுந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்தவரும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

இதன்போது அங்கு வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது நிலையை ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதி அபராதச் சீட்டு வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னரே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் மதுபோதையில் உள்ளதாக கூறியதால்அவருக்குரிய அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் மது இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாகவே அவர் விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்த அவர், மரணத்திற்குப் பிறகு ஆறு பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.

இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்பே கனடியப் பிரஜாவுரிமை பெற்றதால், அவரிடம் கடவுச்சீட்டு இருக்கவில்லை. இதனால் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலோ அல்லது தாயகத்தில் உள்ள அவரது தாயாரை கனடாவுக்கு வரவழைப்பதிலோ பெரும் சட்டச் சிக்கல்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரை அவரது உடல் பிரம்டனிலேயே வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பகிர்க: Facebook Twitter