ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தம்பதியினர் ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.
தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருகின்ற நிலையில், பிள்ளைகள் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காமையினால், அயலவர்களுக்கு அறிவித்த நிலையில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்குள் இனந்தெரியாதோர் உட்பிரவேசித்து இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.