Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரிக்கை!

மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரிக்கை!

மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகத்தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்றையதினம் முதலமைச்சர் விஜய்க்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் உள்ள முக்கிய விடயம்,

தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல் முயற்சியிலேயே பாரிய சாதனை படைத்து முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, ஈழத் தமிழர்கள் சார்பாகத் தனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை அவர் முதற்கண் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர் மீது நடைபெற்றது ‘இனவழிப்பு’ என்றும், அதற்குச் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கஜேந்திரகுமார் எம்.பி. நினைவுகூர்ந்துள்ளார். அந்த நிலைப்பாட்டைத் தற்போதைய த.வெ.க. அரசும் உறுதியாகத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தங்களது தலைமையில் அமையும் சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே, மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றுவது அவசியம். இது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழகம் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திப் போராடி வரும் ஈழத்தமிழர்களுக்குப் பெரும் வலுச்சேர்ப்பதாக அமையும் என்றும், இதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் முதலமைச்சர் விஜய் நீங்காத இடத்தைப் பிடிப்பார் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், தமிழ்த் தேசியப் பேரவை விடுத்துள்ள இந்த முதற்கட்டக் கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பகிர்க: Facebook Twitter