நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பிலான அமைச்சரவை தீர்மானம் குறித்து இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த சந்திப்பின் போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த எடுக்கப்பட்ட முடிவு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பதிலளிக்கையில்,
நாங்கள் கொடுத்த ஒரு வாக்குறுதி என்னவென்றால், நீதிமன்றங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாதக்கணக்கில், வருட கணக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் செல்லும்போது மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
எனவே நீதிமன்றங்களும் ஏனைய அமைப்புகளைப் போல திறம்படச் செயல்பட வேண்டும். அந்தச் செயல்திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் வயதை உயர்த்துவது ஒரு பக்கம் மட்டுமே, நாம் இன்னும் பல கோணங்களில் தலையிடுகிறோம்.
முக்கியமாக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதை விரைவுபடுத்த வேண்டும். அதுவும் வழக்குகள் தேங்கி நிற்கும் ஒரு இடமாகும். அதேபோல சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மேலும் நீதி அமைச்சு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தற்சமயம் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். நிலுவையிலுள்ள 11 இலட்சம் வழக்குகளைக் கொண்ட அமைப்பை விரைவுபடுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆனால் அதைச் செய்ய வேண்டுமானால், முக்கிய விஷயம் என்னவென்றால் வழக்கமாக ஒரு வளர்ந்த நாட்டில் 10 இலட்சம் (1 மில்லியன்) மக்களுக்கு 40 முதல் 60 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருப்பார்கள். ஆனால் இலங்கையில் 10 இலட்சம் மக்களுக்கு சுமார் 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். உண்மையில் இந்த நெருக்கடி வர முக்கிய காரணம் என்னவென்றால், கடந்த 10-15 வருடங்களாக ஒரு முறையான கணிப்புடன் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காததால்தான் வழக்குகள் நிலுவையில் உள்ளன- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.