Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சர்வதேச விசாரணை வேண்டும்- செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச விசாரணை வேண்டும்- செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

செம்மணி வளைவு பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்வதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இதுவரை 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இவ்விடயம் தமிழ் இன அழிப்பின் முக்கிய சான்றாக இருப்பதாகவும், அதனால் சுயாதீனமான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இவ்விடயங்களை மூடிமறைத்து அல்லது நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நீதி கோரி நீண்டகாலமாகப் போராடி வரும் பாதிக்கப்பட்ட மக்களை அரசின் வாக்குறுதிகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதேவேளை இன்று காலை சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செம்மணி மனிதப்புதைக்குழியின் அகழ்வுப்பணிகளை ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள் இன்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter