Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கையில் முதலாவது ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்- மஹியங்கனையின் ‘வியானா கால்வாய்’ பகுதியில் ஆய்வு!

இலங்கையில் முதலாவது ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்- மஹியங்கனையின் ‘வியானா கால்வாய்’ பகுதியில் ஆய்வு!

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது ‘Canal-Top Solar’ சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் ‘வியானா கால்வாய்’ பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட பரந்த கால்வாயாக இருப்பதால், தேசிய மின்சார அமைப்பிற்கு அதிகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்கும் சாத்தியம் மற்றும் ஆண்டின் பெரும்பகுதியில் கிடைக்கும் சிறந்த சூரிய ஒளி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்காக வியானா கால்வாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சூரிய மின்தகடுகள் மூலம் கால்வாயை மூடுவதனால் நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்துதல், கடுமையான வெப்பமான காலநிலையின் போது நீரின் வெப்பநிலையைத் தகுந்த மட்டத்தில் பேணுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற மேம்பட்ட மின்சக்தி திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தல் என்பன இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.

அத்துடன் இத்திட்டத்தில் பாதுகாப்பான மின்சார யானை வேலியும் அடங்குவதால், வனப்பகுதியிலுள்ள யானைகள் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயத்தைக் குறைக்கவும் முடியும்.

அதன்படி இத்திட்டம் நீரை எடுத்துச் செல்லும் ஒரு கால்வாயாக மட்டுமன்றி, சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், நீர் வளங்கள் மற்றும் காட்டு யானைகளைப் பாதுகாக்கும், இலங்கையின் பசுமை மின்சக்தி கொள்கைக்கு புதிய வழிகாட்டும் ஒரு தேசிய அளவிலான மாதிரியான அபிவிருத்தி திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட கள விஜயம் மற்றும் முன்னேற்ற மறுஆய்வுக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் (20) மஹியங்கனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் அலககோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பகிர்க: Facebook Twitter