Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா- பிரதான பாதையை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா- பிரதான பாதையை திறக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதையை, ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு திறந்து வைப்பது குறித்து ஆராயப்பட்டது.

இதன் விளைவாக, ஆலயத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நேரக் கட்டுப்பாட்டுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குறித்த பாதையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மாத காலத்திற்குள் குறித்த பாதையை முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பதற்கும் இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதிலும் சாதகமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பலாலி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி, பொதுமக்கள் தொடர்பாடலுக்கான இராணுவ அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter