Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் தொடர்பில் விசேட விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் தொடர்பில் விசேட விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலம் விசாரிப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) பிற்பகல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.

வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்துள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 54 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (05) மற்றும் நேற்று(06) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

பகிர்க: Facebook Twitter