கொழும்பின் புறநகர் தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையங்களில் அண்மையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட பெண்களின் அடையாளங்கள் சட்டவிரோதமான முறையில் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் சட்ட சங்கம் மற்றும் இலங்கை ஸ்பா சங்கம் ஆகியன இணைந்து இந்த முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இந்த சட்டவிரோத செயலுக்கு பொலிஸாரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் சந்தேகநபர்கள் மட்டுமே என்பதுடன், அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஊடாக பொதுவெளியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுசந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் அடிப்படையில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொருவரும் நிரபராதிகளாகவே கருதப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பெண்களின் முகங்கள் மற்றும் அடையாளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்துவது அவர்களை அவமதிக்கும் செயலாகும் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களின் உரிமைகளை மீறும் வகையில் காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே செயற்பட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறு காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலவத்துகொட பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 34 பெண்கள் உட்பட மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.