காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 11 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காலிமுகத்திடல் கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற ஆறு சிறுவர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து அடித்துச் செல்லப்பட்ட ஐந்து சிறுவர்களை மீட்டிருந்தனர்.
அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மூவர் லேடி ரிட்ஜ்வே (Ridgeway) சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய மற்றுமொரு மாணவனைத் தேடி, பொலிஸ் உயிர் காப்பு அதிகாரிகளும் கடற்படை சுழியோடி குழுவினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.