தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு உள்ளிட்ட சுமார் 100 பிரதேசங்களில் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று (30) மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.
வெசாக் பௌர்ணமி மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக மின்சாரத்திற்கான தேவை குறைந்தமையால், மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையே இந்த மின் விநியோகத் தடையிற்குக் காரணமாக அமைந்தது.