Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக நடமாடும் பேருந்து!

போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக நடமாடும் பேருந்து!

போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக, சுகாதார அமைச்சைச் சேர்ந்த மேலும் ஒரு நடமாடும் பேருந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசியத் திட்டத்தின் இரண்டாண்டு மூலோபாயத் திட்டத்திற்கு அமைய இது செயல்படுத்தப்படுகின்றது.

அதன்படி இந்த நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தை மேலும் விரிவாக்குவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் வாகனம் செலுத்தும் போது போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைப் பரிசோதிக்கும் இந்நடமாடும் பரிசோதனைத் திட்டம், தற்போது நாட்டின் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பரிசோதனைகளுக்குத் தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களைக் படிப்படியாக அபிவிருத்தி செய்வதன் மூலம், நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இப் பரிசோதனைச் செயல்பாட்டை விரிவுபடுத்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த எழுமாற்றான போதைப்பொருள் பரிசோதனைத் தேசியத் திட்டத்தின் கீழ், இதுவரை 7,150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக அமைச்சுக்களுக்கிடையிலான ஒத்துழைப்பைப் பெற்று குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டத்தினூடாக நாட்டின் வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்புக்களைக் குறைப்பதே எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter