Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பள்ளியவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம்- துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது!

பள்ளியவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம்- துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது!

வத்தளை, கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26, 35 மற்றும் 36 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த ஜூலை 23ஆம் திகதி காரில் வந்த குழுவினரால் நடாத்தப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (7) இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியை தவிர, காரை ஓட்டிச் சென்ற சாரதியும், குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க உதவிய நபர் ஒருவரும் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த ‘குடு ரொஷான்’ என்பவரைக் இலக்கு வைத்தே அன்றைய தினம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter