Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வளி மாசடைவதன் தாக்கங்களால் இலங்கையில் வருடாந்தம் 7000 மரணங்கள் பதிவு!

வளி மாசடைவதன் தாக்கங்களால் இலங்கையில் வருடாந்தம் 7000 மரணங்கள் பதிவு!

வளி மாசடைவதன் தாக்கங்களால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

உலகில் வளி மாசடைவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், வளி மாசடைவின் காரணமாகப் பல்வேறு வழிகளிலும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உலகளவில் வளி மாசடைவால் 7 முதல் 8 மில்லியன் மரணங்கள் நிகழ்கின்றன.

அதேபோன்று இலங்கையிலும் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் வளி மாசடைவால் ஏற்படுகின்றன.

இதற்குக் காரணம் காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களாகும்.

வளி மாசடைவினால் பல்வேறு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.

முக்கியமாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, வளி மாசடைவால் மாரடைப்பு, இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

வீட்டுக்குள்ளான வளி மாசடைவு தொடர்பாகவும் வைத்தியர் சாந்தனி விதான இதன்போது விளக்கமளித்தார்:

அனைத்து வகையான எரிப்புச் செயற்பாடுகளாலும் நமது சூழல் மாசடைகிறது. வெளிப்புற சூழலை விட வீட்டுக்குள்ளான வளி மாசடைவானது ஐந்து மடங்கு அதிகமாகும்.

சமையலறையை எடுத்துக் கொண்டால், விறகு அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது. விறகு எரியும் போது தீங்கு விளைவிக்கும் புகை வெளியேறுகிறது.

இந்தப் புகை வெளியேற வழியில்லாததால், அந்தப் புகை வீட்டுக்குள்ளேயே தேங்குகிறது.

முன்பெல்லாம் புகைப்பிடிக்கும் ஆண்களுக்கே நுரையீரல் புற்றுநோய் வந்தது.

ஆனால் தற்போது பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே மூடிய இடத்திற்குள் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பகிர்க: Facebook Twitter