மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாகச் சிலர் வாதிட்டாலும், அது யதார்த்தமானது அல்ல. அரச அதிகாரிகள் நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு மக்களுக்கு நேரடியாகப் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்பதால், மாகாண சபைகளுக்கு நேரடியான மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் இயங்குவது ஒரு குற்றமாகும். மாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தினால், எதிர்காலத்தில் நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்து நிறுவனங்களையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயக்க முடியும் என்ற ஆபத்தான நிலையை அது உருவாக்கும்.
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினமாவது அரசு மாகாண சபைத் தேர்தலை எப்போது, எந்த முறையில் நடத்தப் போகின்றது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.