தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் இன்று (28) நடைபெறவுள்ள காவடி நடன ஊர்வலத்திற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தெவிநுவர ஊர்வலத்தின் காவடி நடனம் தொடர்பாக இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக, இந்த முறை அந்த நடனத்தை நிறுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் அண்மையில் பரிந்துரைத்திருந்தார்.
எனினும் இது தொடர்பாகத் தீர்மானிப்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கடந்த ஆண்டுகளில் காவடி நடனத்தில் பங்கேற்ற அனைத்துக் குழுக்களுக்கும் இந்த முறையும் காவடி நடனத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, பொலிஸாரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா காவடி நடனத்துடன் வீதி உலா வரவுள்ளது.
இதனிடையே, தெவிநுவர பெரஹரா பாதுகாப்பு தொடர்பாக மேலெழுந்துள்ள பிரச்சினை குறித்து அரசியல் மேடைகளிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாகச் சரியான வேலைத்திட்டம் எதுவும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தெவிநுவர தேவாலயத்தில் எழுந்த பிரச்சினை குறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி தெரிவிக்கையில், ஏதேனும் புலனாய்வுத் தகவல் கிடைக்கும் போது அதனை பகுப்பாய்வு செய்து முடிவெடுக்கத் தவறுவது ஏதேனுமொரு தருணத்தில் தவறாக முடியக்கூடும் என்றும், அது பொலிஸாரின் கடமை என்றும் கூறினார். அதனை அரசாங்கத்தின் குறையாகக் காட்டுவது சில குழுக்களின் பிரச்சினை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் கலாச்சார உத்சவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.