பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாஷ் என்ற அரசியல் கைதியே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் எந்த விதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது என்பதுடன் தற்போது 41 வயதில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதியரசர் பிரதீப் ஹெட்டியாராச்சி வழங்கிய இந்தத் தீர்ப்புடன், நீதியரசர் பி.குமாரரத்தினமும் உடன்பட்டிருந்தார். நீண்டகாலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில், மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் என்ற தனுஷுக்குப் பிணை மறுத்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
தம்பையா பிரகாசிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், மேலும் 115 குற்றச்சாட்டுகள் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழும் சுமத்தப்பட்டுள்ளன.
கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரதிவாதியான தம்பையா பிரகாசுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, நான்கு சரீரப் பிணை, கடவுச் சீட்டை ஒப்படைத்தல், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை பிரிவிற்கு சமூகமளித்தல் ஆகிய இறுக்கமான நிபந்தனைகளுடன் பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிணை நிபந்தனைகளில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B என்ற திருத்தத்தை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தபோதிலும், பிணையை மறுக்கும்போது மேல்நீதிமன்றம் அந்தத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முறையாகக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது அவரது மகளுக்கு ஒரு வயதே ஆகியிருந்தது என்றும், அவர் நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காலகட்டம் முழுவதும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கவனிப்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் போயுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர்.