‘குஷ்’ போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான பெண்ணிடம் இருந்து 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றையதினம் ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தொம்பே, பரன்கொட பகுதியில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞனிடம் இருந்து 9 கிலோ 128 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, 03 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.