முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 பிப்ரவரி 6ஆம் திகதி அன்றைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக தும்முல்ல உள்ளிட்ட வீதிகள் தடைப்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று (13) அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, விமல் வீரவங்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பிரதம நீதவான், இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.