வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த விவகாரம் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது.
இதன்போது சந்தேக நபருக்கு எதிரான முதலாம் குற்றசாட்டு சந்தேகத்துக்கு அப்பால் வழக்கு தொடுனர் தரப்பினரால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அமலவளன் ஆனந்தராஜா தெரிவித்திருந்தார்.
அதற்கு இணங்க குறித்த குற்றசாட்டிற்கு 02 வருட கால சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபா அபராதம், அபராத தொகையினை செலுத்த தவறின் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டனை எனும் கட்டளை வழங்கி தீர்ப்பளித்தார்.
குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.