Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கையிலும் “எல் நினோ” காலநிலை தாக்கம்!

இலங்கையிலும் “எல் நினோ” காலநிலை தாக்கம்!

உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலையை உருவாக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான “எல் நினோ” காலநிலை நிகழ்வு, ஜூலை முதல் செப்டம்பர் மாத காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல் நினோ நிகழ்வுகள் பொதுவாக பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இம்முறை காணப்படும் நிலை மூன்றாவது உச்சக் கட்டமான தீவிர நிலைக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதே “எல் நினோ” என அழைக்கப்படும்.

இது சாதாரணமாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு, சுமார் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் தன்மை கொண்டது.

மூன்றாவது உச்சக் கட்ட நிலை என்பது கடல் வெப்பநிலை இயல்பை விட 1.5°C முதல் 2.0°C வரை அதிகரித்திருப்பதை குறிக்கிறது என வானிலை நிபுணர்கள் விளக்குகின்றனர்.

இலங்கை போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகள் இத்தகைய நிலைமைகளால் நேரடி தாக்கங்களை எதிர்கொள்ளும் அபாயம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நெல் மற்றும் பிற பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான மழை குறைவதால், நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு விளைச்சல் குறையக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

அதேவேளை முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் நீர்மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் அதிக வெப்பநிலை காரணமாக நீர்ச்சத்து குறைதல், சூரிய வெப்பத் தாக்கம் (Sunstroke) மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயமும் காணப்படுகிறது.

மனித செயற்பாடுகளால் வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse gases), இயற்கையான எல் நினோ நிகழ்வுகளின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இந்த தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்க: Facebook Twitter