நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையில் நேற்று மோதல் ஏற்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று காலை அங்கு மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மோதல் காரணமாக சுமார் 100 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணி அளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன்போது கைதிகள் சிறையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயற்சித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டனர்.
பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் பெரும் சிரமப்பட்டனர். இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்தனர்.
இதற்கிடையில், சிறைச்சாலைக்குள் நிலவும் சூழலை அவதானிப்பதற்காக விமானப்படையின் ட்ரோன் (Drone) கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ட்ரோன் கருவிகளும், பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்த மேலதிக இராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.