வடக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் மற்றும் பட்டதாரிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் அரசின் ஒரு சில வேலை வாய்ப்பு நியமனங்களில் கூட அநீதி இழைக்கப்பட்டு வருவதுடன் வேலை வாய்ப்பை வழங்குவதாக தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையிலே நாங்கள் இப்போது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். எமக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இனிவரும் காலங்களில் நாம் முன்னெடுக்கும் இவ்வாறான போராட்டங்களில் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் அனைத்து பட்டாதாரிகளும் இதில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.