தமிழ் இனம் எதிர்கொண்ட கொடூரமான இனப்படுகொலையை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு செம்மணியில் மீட்கப்படும் இந்த மனித எச்சங்கள் முக்கிய ஆதாரம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வின் மூலம் இதுவரை 400 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான அறிவியல் ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
நீதி அமைச்சின் பூரண அனுசரணையோடு இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தற்போதைய அரசு எடுத்துள்ள முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் நன்றியைக் கூறிக்கொள்கின்றோம்.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், அதனை மேலும் வலுவுள்ளதாக மாற்றியமைக்கவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இரகசியமாகப் புதைக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்கான அகழ்வுப் பணிகளை அரசு உரிய காலத்தில், துரித கதியில் முன்னெடுக்க வேண்டும்.
காலம் காலமாகத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்ட கொடூரமான இனப்படுகொலையை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கும் செம்மணியில் மீட்கப்படும் இந்த மனித எச்சங்களை மிக முக்கிய சட்ட ஆவணங்களாகக் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.
எனவே இந்த விவகாரத்தை மூடிமறைக்காமல், அரசு உறுதியான முடிவை எடுத்துத் தனது நடுநிலைமையையும் நீதி வழங்கும் தன்மையையும் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என இந்த உயரிய சபையில் கேட்டுக்கொள்கின்றேன்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.