Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர் மீதான அவதூறு வழக்கு- அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர் மீதான அவதூறு வழக்கு- அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் தாக்கல் செய்த வழக்கில் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (19) தீர்ப்பளித்துள்ளது.

தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் போலிப் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று தெரிவித்து, தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் பெண் வைத்தியர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

குறித்த வழக்கு தீர்ப்புக்காக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் நீதவான் நஜ்மி ஹூசைன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதலாவது எதிர்த்தரப்பாளியான வைத்தியர் ஜெயக்குமார் பேசிய கருத்துகள் தவறானவை அல்ல என நீதிமன்றம் கருதியதால், அவர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

இரண்டாவது எதிர்த்தரப்பாளியான நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்குப் பேச்சுச் சுதந்திரம் உள்ளது” என விளக்கமளித்திருந்தார்.

எனினும் அதனை வன்மையாக நிராகரித்த நீதிவான், நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, பேச்சுச் சுதந்திரத்திற்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை உண்டு என சுட்டிக்காட்டினார்.

எந்தவித முறையான சான்றுகளும் இன்றி ஒரு வைத்திய அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அல்லது அவர் ஊழல் புரிந்தார் என்றோ அவதூறு பரப்ப யாருக்கும் உரிமை இல்லை என நீதிவான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு எதிராக இனி எவ்விதமான அவதூறு மற்றும் போலிப் பரப்புரைகளையும் சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ முன்னெடுக்கக் கூடாது என்றும், இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அவதூறான மற்றும் போலிப் பிரச்சாரக் காணொளிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிவான் கட்டளையிட்டார்.

குறித்த வழக்கில் வழக்குத் தொடுநர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter