Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி- ‘ஃப்ரீ லோயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு கண்டனம்!

அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி- ‘ஃப்ரீ லோயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு கண்டனம்!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளைப் போர்வையாகப் பயன்படுத்தி, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சியை ‘ஃப்ரீ லோயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, மஹிந்த பத்திரண, அசங்க நவரத்ன மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகிய கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த செயல், திட்டவட்டமானதொரு அரசியல் அடக்குமுறை முயற்சி என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (15) கோட்டை நீதவானுக்கு அறிவித்திருந்தது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்தத் தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் அங்கு குறிப்பிட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்து வெளியிட்டமை தொடர்பான விவகாரத்திற்காக ஐந்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒரே வழக்கின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதானது மிகவும் அரிதானதொரு செயலாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனங்களை அவமதித்தல் சட்டத்தின் கீழ், சுயாதீன நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கொன்றைத் தாக்கல் செய்யவோ அல்லது அதனை முன்னோக்கி கொண்டு செல்லவோ பொலிஸாருக்கு எந்தவொரு சட்டப்பூர்வ ஏற்பாடுகளும் இல்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு காணப்படுகின்ற போதிலும், அரசியல்வாதிகளை மௌனமாக்குவதற்காக இவ்வாறு பொலிஸ் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதானது ஒரு நாகரீகமான சமூகத்தில் நடக்கக் கூடாத ஒன்று என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய ஆளும்கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகத் தாம் தீவிரமாகப் பங்களித்ததாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்தியக்கடதாசி மூலம் ஒப்புக்கொண்ட ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, கடந்த காலத்திற்குச் செல்வாக்கு செலுத்தும் வகையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைத்து மட்டங்களிலுமுள்ள நபர்களை அசெளகரியத்திற்குள்ளாக்கி, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் இவ்வாறான அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருவதாகவும் ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 14 (1) (a) பிரிவின் மூலம் கருத்துத் தெரிவிக்கும் மற்றும் பேச்சுச் சுதந்திரமும், 10 ஆம் பிரிவின் மூலம் சிந்திக்கும், வினவும் மற்றும் மனச்சாட்சிக்கான சுதந்திரமும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

எனவே அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் இந்த அடிப்படை உரிமைகளை அழிப்பதற்கு அரசியல்மயப்படுத்தப்பட்ட பொலிஸ் சேவைக்கு எவ்வித திறனோ அல்லது உரிமையோ இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகளைத் தடுப்பதற்கு பொலிஸ் திணைக்களம் மேற்கொள்ளும் இந்த சர்வாதிகார முயற்சியை ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.

பகிர்க: Facebook Twitter