யாழ். செம்மணியில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மனிதநேயத்தையும் உலுக்கிப் போடும் உண்மைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன!
20ஆவது நாளான இன்றையதின (10) அகழ்வின் போது மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 9 எச்சங்களில் 8 எலும்புக்கூடுகள் குழந்தைகளின் உடல்கள் என நம்பப்படுகிறது.
வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமல்லாமல் சிறுவர்கள் பயன்படுத்திய குழந்தை பால் புட்டிகள், விளையாட்டுப் பொம்மைகள், பள்ளிப் பைகள், சிறிய காலணிகள் முதலானவை மீட்கப்பட்டுள்ளன
தரைக்குக் கீழே வெறும் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழத்திலேயே இந்த எச்சங்கள் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இரண்டாவது பெரிய கூட்டுப் புதைகுழியாகக் கருதப்படும் இந்தச் செம்மணி அகழ்வின் போது, இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 311 உடலங்கள் தற்போது முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். செம்மணியில் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி முதல் யாழ்ப்பாண நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில், பிரபல தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண நீதித்துறை மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஆகழ்வுப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

